சனி, 22 மே, 2010

தாய் அன்பு

அரபுநாடுகள் ஒன்றில் திரவியம் தேடிக் கொண்டிருக்கும் நான் என் நண்பரோடு அவருடைய காரில் வரும்போது ஆடியோ கேசட்டை போட்டார்... அது பத்து வருடங்களுக்கு முன் தாய் பேசி அனுப்பியது... அந்த சமயத்தில் செல்போன், பப்ளிக் போன் பெரிதாக புழக்கத்தில் இல்லாத நேரம்.. கடிதமோ இல்லை, இந்த மாதிரி ஊருக்கு செல்வபர்கள் அல்லது வருபவர்களிடம் ஆடியோ கேசட்டில் பேசி அனுப்பும் (வீரப்பன்) டெக்னிக்கை நாங்கள் பின்பற்றிய நேரம்......

அதில் நண்பரின் குடும்பத்தார் பேசி இருந்தார்கள். அது தொலைபேசியில் பேசினால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு நெருக்கத்தை உணர்த்துவதாக இருந்தது.

" என்ன ராசா எப்படிப்பா இருக்க, உடம்புக்கெல்லாம் எப்படி இருக்கு, நல்லா சாப்புடுப்பா" அதில் நண்பருடைய தாயின் குரலில் இருந்த பரிதவிப்பும், அக்கறையும் பாசமும் கேட்பவர்களை உருக்கும் வகையில் இருந்தது... மகனை பொருள் தேட அனுப்பி விட்டு, நேரில் பார்க்க இயலாத பரிதவிப்பான குரல் மனதை என்னவோ செய்தது...

ஒவ்வொரு பத்து வார்த்தைகளுக்கும் மகனின் உடல்நலத்தை விசாரித்த அந்த தாய்ப்பாசம்... நல்லா சாப்புடுப்பா!!! என்ற சொன்ன சொல்லில் பிள்ளையின் பசி அறிந்த தாயின் தவிப்பு தெரிந்தது...

தனக்கு தெரிந்த எல்லா கடவுள்களையும் தன் மகனின் தலைமாட்டில் இருந்து காவல் காக்க உத்தரவிட்ட அந்த குரலில் மகனை பற்றிய அக்கறை தெரிந்தது. நடு நடுவே அவசர பணதேவைக்காகவும் மகனின் எதிர்காலத்திர்க்காகவும் தான் இந்த பிரிவு என்று சமாதான வார்த்தைகளை தனக்கும் மகனுக்கும் சிறிய குற்ற உணர்ச்சியோடு சொல்லிக் கொண்டது அந்த தாய் மனது.. நண்பரின் நண்பருக்கும் சேர்த்து கடவுளை வேண்டிக்கொண்ட அந்த தாய் " என் மகனை பாத்துக்கப்பா " என்று சொல்ல தவறவில்லை...

என் மகனுக்கு நான் எதுவும் சொல்ல தேவையில்லை அவனுக்கு யெல்லாம் தெரியும் என்ற பெரிமிதத்தொடு பிரிவில் தடுமாறிய இரண்டொரு வார்த்தைகளோடு பெரிதாய் அறிவுரை சொல்லாத அந்த தகப்பனின் பாசத்திற்கு முன்னால் எதுவும் பெரியதாய் தோன்றாது..

அப்பா, அம்மாவை நாங்க பாத்துக்குறோம், நீ கவலைபடாத!! என்று சொன்ன சகோதரியின் வார்த்தைகளில் " நீ இல்லாம நாங்க என்ன போறமோ" என்ற வருத்தம் தெரிந்தது..

இறுதியில் ஒரு கலங்க வைக்கும் சிறுகதையை ஆடியோ கேசட்டில் கேட்ட உணர்வோடு " நாளைக்கு அம்மாவுக்கு போன் பண்ணனும்" என்ற நினைவோடு உறங்க சென்றேன்...